BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

How to Improve Handwriting with Kids - Tips and Tricks for Parents

குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?
உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும்.

குழந்தையின் எழுத்து நன்றாக இல்லை என இரட்டைக் கோடு, நான்கு கோடு நோட்டுகளை வாங்கித் தந்து, பக்கம் பக்கமாக அவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தினால், அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். குழந்தையின் கையெழுத்தை அழகாக்க, முதற்கட்டமாக ஃபைன் மோட்டார் ஸ்கில் (Fine Motor Skill) எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடி வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதியடைந்து, எழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது தொடர்பான பயிற்சிகளைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை குழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச் சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒரு மாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

சில்லறைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ள உண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும்; பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின் விரல்கள் பழக்கப்படும்.

குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிமானத்தன்மை அதிகரிக்கும்.



குழந்தைகள் பேப்பர்களைக் கிழித்து பந்துபோல உருட்டி விளையாடினால், தடை போடாமல் அதை அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். அல்லது, அக்குபஞ்சர் பந்துகளை வாங்கித் தந்தும் விளையாடச் சொல்லலாம்.

குழந்தைகளிடம் உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள், பாசிகள் போன்றவற்றை கோக்கச் சொல்லலாம். அதேபோல தடிமனான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் அவர்களை நூலை கோக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.

உங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறத்தில் க்ரயான்ஸ் அல்லது கலர் பென்சிலை அவர்களிடம் கொடுத்து, முட்டைக் கூடு, காகிதக் கோப்பை போன்றவற்றில் அவர்களைப் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.

சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மட்டும் சரிவர எழுத வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் மொத்தக் கையெழுத்தும் பார்க்க சரியில்லாதது போன்று தோன்றும். எனவே, சார்ட் அல்லது கார்ட்போர்டு அட்டைகளில் அந்த எழுத்துக்களை மட்டும் பெரிதாக எழுதி, அதன்மீது க்ளேவை வைத்து அந்த எழுத்து போன்றே வடிவமைக்கச் சொல்லலாம்.

குழந்தைகளின் நரம்புகள் மெலிதாக இருக்கும் என்பதால் அவர்கள் எழுதப் பழகும்போது பிடிமானத்துக்குக் கடினமாக இருக்கும் பேனா அல்லது பென்சிலை வாங்கிக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்கள் கை சிரமத்துக்கு உள்ளாகும்.

குழந்தைகளை அவர்கள் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத் திறக்க சொல்லலாம். இப்படி நாள் ஒன்றுக்கு 10 முறையாவது செய்து பழக வையுங்கள்.

இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வைத்தால், உங்கள் குழந்தையின் கையெழுத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
« PREV
NEXT »

Facebook Comments APPID